டாஸ்மாக்கை திறக்கும் தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா?

Webdunia
சனி, 16 மே 2020 (07:19 IST)
தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சில கோரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் திறக்கப்பட்டது. ஆனால் அப்போது விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக்குகளை மூட உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து அந்த உத்தரவுக்கு தடைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் மீண்டும் கடை திறக்கப்பட உள்ள நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘கொரோனா ஊடரங்கு காலத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான கடைகளை மே 7ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. . அதன்படி டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் 6 அடி இடைவெளியுடன் வட்டங்கள் வரையப்பட்டு, வரிசை முறைப்படுத்தப்பட்டு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டது. கூட்டத்தை ஒழுங்கு படுத்த ஒலிபெருக்கி வைக்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளுக்கான செலவினங்கள் யாவும் ஊழியர்கள் செய்துள்ளனர். இதற்கு மேலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு காலை மற்றும் பகல் உணவு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்த செலவு என ஒவ்வொரு கடையிலும் குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை ஊழியர்கள் செலவழித்துள்ளனர்.

கடை பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பெயரளவுக்கு முககவசமும், கையுறைம், கிருமி நாசினியும் நிர்வாகத்தரப்பில் வழங்கப்பட்டது. இந்த பாதுகாப்பு உபகரணங்களையும் ஊழியர் சொந்த செலவில் வாங்கி பயன்படுத்தியுள்ளனர். டாஸ்மாக் கிடங்குகள் மற்றும் திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டிருந்த சரக்குகளை ஊழியர்களே சொந்த செலவில் கடைகளுக்கு கொண்டு வந்துள்ளனர்.

அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் மதுபான கடைகளை திறப்பது, விற்பனை செய்வது என்பதில் மட்டுமே அக்கறை எடுத்துகொண்டதே தவிர ஊழியர்களது பிரச்சனைகளில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதே கடந்த வாரம் கடைகள் திறக்கப்பட்ட போது ஏற்பட்ட அனுபவமாகும். இந்த நிலையில் நீதிமன்றத்தின் நிபந்தனைகள் பின்பற்றமுடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதில் நிபந்தனைகள் பின்பற்றபடாததை கணக்கில் எடுத்துகொண்டு கடைகளை மூடிட உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ததில். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் 16.05.2020 முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் திறக்கப்படவுள்ளன. தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் கடந்த வார அனுபவங்களை கணக்கில் கொண்டு ஊழியர்களது பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக அளிக்கபட வேண்டும். கடையில் ஏற்படும் செலவினங்களுக்கு தொகையை உடனுக்குடன் வழங்கிட வேண்டும், கடையில் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் பணிக்கு வரும் போதும், பணி முடித்து செல்லும் போதும் குறைந்தபட்சம் தெர்மல் டெஸ்ட் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

ஒவ்வொரு நாளுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கவும் வேண்டும். டாஸ்மாக் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் கிடங்குகளில் சரக்கு ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுமைப்பணி தொழிலாளர்கள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர் உட்பட சரக்கு ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து தொழிலாளருக்கும் மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டும், அனைத்து கடைகளிலும் விற்பனையை சிசிடிவி மூலம் கண்காணிக்கும் ஏற்பாட்டை செய்திட வேண்டும்.

மேலும் தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஆதாரமாக விளங்கும் டாஸ்மாக் நிறுவன ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளான பணி வரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட சட்டப்படியான உரிமைகளை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டுமென இத்தருணத்தில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்