தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. பின்னர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. இதுகுறித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்த நிலையில் இன்று டாஸ்மாக் கடைகள் மீதான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம். இதனால் மது பிரியர்கள் கடைகள் திறக்கப்படுவது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ” உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.” என்று கூறியுள்ளார்.