இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானோர் தினமும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் மாசு அளவில்லாதது. அதுமட்டுமின்றி புகைபிடிப்பவர்களால் அருகில் இருக்கும் புகைபிடிக்காதவர்களும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் தாக்கப்படுகின்றனர். சிகரெட் கம்பெனிகளை இழுத்து மூட திராணியற்ற அரசுகள் 'சிகரெட் பிடிப்பது உடல்நலத்திற்கு தீங்கானது' என்ற விளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து வருகின்றன. அதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் ஓடும் லட்சக்கணக்கான வாகனங்கள் விடும் புகையால் தினமும் காற்றில் மாசு ஏற்படுகிறது. இவற்றுக்கெல்லாம் அரசும் சுப்ரீம் கோர்ட்டும் எந்தவித தீர்வையும் காணவில்லை.
ஆனால் இந்திய மக்கள் அனைவரும் ஒரே ஒரு நாள் குதூகலத்துடன் கொண்டாடும் தீபாவளி பண்டிகையன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற நிபந்தனையை சுப்ரீம் கோர்ட் விதித்துள்ளது. இந்த இரண்டு மணி நேரம் தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் ஆறு மாதங்கள் சிறைதண்டனை என்று பயமுறுத்தல்களும் உள்ளது.
இந்த நிலையில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையைபோல் டாஸ்மாக் கடையையும் 2 மணி நேரம் மட்டுமே திறக்க வேண்டும் என்று தேசிய முன்னேற்ற திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். உயிரை குடிக்கும் மதுவை தினமும் பத்து மணி நேரம் விற்பனை செய்யும் அரசு, வருடத்திற்கு ஒருநாள் வெடிக்கும் பட்டாசுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே ஒதுக்கியுள்ளது சரியா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.