ஆளும் அதிமுக உடன் கூட்டணி வைத்து இரட்டை இலை சின்னத்தில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமிமுன் அன்சாரி. அதிமுக இரண்டாக பிளவுபட்ட போது இவர் எடப்பாடி பழனிச்சமியி அணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வக்களித்தது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.
இந்நிலையில் தமிமுன் அன்சாரிக்கு 10 கோடி ரூபாய் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க அளிக்கப்பட்டதாக எம்எல்ஏ சரவணன் வீடியோ ஒன்றில் கூறினார். ஆனால் இதனை இருவரும் மறுத்தனர்.
இந்த வீடியோ வெளியான பின்னர் தமிமுன் அன்சாரி சட்டசபை விவகாரங்களில் அதிமுக உடன் இணைந்து செல்லாமல் தனித்து செயல்பட்டு வருகிறார். மேலும் ஜனாதிபதி தேர்தலில் அதிமுக பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததை கண்டித்த தமிமுன் அன்சாரி தன்னுடைய வாக்கு பாஜகவுக்கு இல்லை என கூறினார்.
இந்நிலையில் பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த தமிமுன் அன்சாரி அதிமுக மீது தனக்கு உள்ள அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஜனாதிபதி வேட்பாளராக இருக்கக் கூடியவர் சகிப்புத்தன்மை, பரந்துபட்ட மனம், ஜனநாயக பார்வை கொண்டவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
அந்த அடிப்படையில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாரை நாங்கள் ஆதரிக்கிறோம். சபாநாயகராக இருந்து சிறப்பான முறையில் பணியாற்றியவர். அதிமுக பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது அதிர்ச்சி அளிக்கிறது. இதுஒரு தவறான முடிவாகவே நாங்கள் பார்க்கிறோம் என்றார் என கூறியுள்ளார்.