வார இறுதியில் இருந்து வாட்டப்போகிறது வெயில் – வெதர்மேன் தகவல் !

Webdunia
வியாழன், 2 மே 2019 (15:11 IST)
பானி புயல் கரையைக் கடப்பதை அடுத்து வார இறுதியில் இருந்து மீண்டும் வெய்யிலின் தாக்கம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிற்து.

தமிழகம் முழுவதும் இந்தாண்டு கோடைக்காலம் வரும் முன்னரே வெய்யிலின் தாக்கம் அதிகமாகி வந்தது. நகர்ப் பகுதிகளில் வெய்யில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்ததே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து சமீபத்தில் உருவான பானி புயல் காரணமாக தமிழகத்திற்கு மழைக் கிடைக்கும் என நம்பப்பட்ட நிலையில் புயல் இப்போது வடமேற்குத் திசையில் நகர்ந்து தமிழகத்தை ஏமாற்றியுள்ளது. இந்நிலையில் புயலின் நகர்வுக் காரணமாக கடந்த சில நாட்களாக இருந்த மிதமான வெயில் வார இறுதி முதல் மீண்டும் அதிகமாகும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் வடமாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகியப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகும் எனவும் இன்று இரவு சேலம், நீலகிரி, தர்மபுரி மற்றும் கிருஷணகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்