தமிழகத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது. பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை ஜூன் 8 முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ‘உடல் வெப்ப பரிசோதனை செய்து வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்ப வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் இருப்பவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. ஏ.சி எந்திரங்களை பயன்படுத்தாமல் காற்றோட்டத்துக்கான அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைக்க வேண்டும். அனைத்து மேஜைகளிலும் சானிட்டைசர் வசதி செய்து தர வேண்டும். கழிவறைகளை நாளொன்றுக்கு ஐந்து முறை சுத்தம் செய்ய வேண்டும். தரை, அலமாரிகள், சமையல் அறை, லிப்ட் போன்றவை அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். அடிக்கடி கைபடக்கூடிய மேஜைகள், பணம் செலுத்துமிடம், லிப்ட் பட்டன் போன்றவை சானிட்டைசர் மூலம் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.
சமூக இடைவெளிக்காக மேஜைகளில் சேவை இல்லை என்ற பலகை வைக்கப்பட வேண்டும். இடவசதி பற்றிய தகவல் பலகையை நுழைவு வாயிலில் வைக்க வேண்டும். உணவை கையாள்வோர், கைக்கடிகாரம், நகைகளை அணியக்கூடாது. காய்கறி, அரிசி, பருப்பு போன்றவற்றை கழுவி உபயோகப்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.