கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது.இந்நிலையில்நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து சில்லரை வியாபாரிகளும், நெல்லை நகர் பகுதியில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் பொருட்கள் வாங்க அதிகாலை முதலே கூட்டமாக குவிகின்றனர்.
இதையடுத்து, அப்பகுதியில் வியாபாரிகள் கூட்டமாகக் காணப்படுவதால், போலிஸார் ஒவ்வொரு வாகனத்திற்கும் தலா ரூ.500 அபராதம் விதிப்பதாகவும், அவர்களை அவமரியாதையுடம் நடத்துவதாகவும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று மணிக்கணக்கில் காக்க வைப்பதாக புகார் எழுகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்ட அனைத்து வியாபாரிகளும் ஒன்றுகூடி இன்று முதல் கடைகளை திறக்கக் கூடாது என முடிவு செய்து சுமார் 40 கடைகளை மூடியுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சமூக இடைவெளியை கடைபிடித்து காவல் பணிகளை ஆற்ற வேண்டியதை வலியுறுத்தியும், மக்களை அவமரியாதையுடன் நடத்தக்கூடாது; மக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து காவலர்களுக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை கூறியுள்ளார்.
இன்று, காவல்துறை, உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.