தமிழ்நாட்டு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வர துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா நடந்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் நீராட அப்பகுதியில் குவிந்து வருகின்றனர். இதனால் ரயில்களில் முன்பதிவு பெட்டிகள், ஏசி பெட்டிகளை கூட அவர்கள் உடைத்து உள்ளே நுழையும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில் வாரணாசியில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டிக்கு சென்ற தமிழக வீரர்கள் கும்பமேளா கூட்டநெரிசலால் அங்கேயே சிக்கியுள்ளனர். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட அவர்கள் தாங்கள் ஏசி பெட்டியில் முன்பதிவு செய்திருந்தும் கும்பமேளா பயணிகள் பெட்டிகளை ஆக்கிரமித்து கொண்டதால் ஊர் திரும்ப முடியவில்லை என கூறி தமிழக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக ஏற்பாடு செய்துள்ளார். அவர்கள் விரைவில் விமானம் மூலமாக தமிழகம் அழைத்து வரப்பட உள்ளனர்.
Edit by Prasanth.K