கும்பமேளாவில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் அதை தவிர்க்க நண்பர்கள் சிலர் சேர்ந்து கூகிள் மேப் உதவியுடன் படகிலேயே பயணித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா இந்தியாவில் பிரசித்தி பெற்ற திருவிழாவாக உள்ளது. தற்போது மகா கும்பமேளா நடந்து வரும் நிலையில் மக்கள் ரயில்கள் கிடைக்காமல் முண்டியடித்து கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. மேலும் சாலை வழி போக்குவரத்தும் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இந்த போக்குவரத்து நெருக்கடிகளில் சிக்காமல் கும்பமேளா செல்வது எப்படி என கம்ஹாரியா பகுதியை சேர்ந்த 7 நண்பர்கள் யோசித்து வந்துள்ளனர். பின்னர் கங்கை நதி வழியாகவே ஏன் கும்பமேளாவுக்கு செல்லக்கூடாது என அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தரைவழியாக சென்றால் 170 கி.மீ தூரத்தில் ப்ரயாக்ராஜ், ஆனால் கங்கை நதி சுற்றி வளைத்து செல்வதால் அதில் பயணித்தால் 275 கி.மீ பயணிக்க வேண்டும்.
ஆனால் சாலை போக்குவரத்து நெரிசலில் பயணிப்பதை விட கங்கை நதி வழியாக பயணிப்பது சுலபம் என திட்டமிட்ட நண்பர்கள் குழு இதற்காக ஒரு படகை தயார் செய்து கடந்த 11ம் தேதி குழுவாக கங்கை நதியில் பயணத்தை தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே படகு இயக்கிய அனுபவம் இருந்ததால் கூகிள் மேப்பை வைத்து கங்கை நதி பிரியும் பகுதிகளை அறிந்து கொண்டு அவர்கள் பாதுகாப்பாக படகை இயக்கி கூட்ட நெரிசலில் சிக்காமல் கும்பமேளாவுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.
Edit by Prasanth.K