தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தமிழக முதலவர் எடப்பாடிப் பழனிச்சாமி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நானே தொலைக்காட்சியில்தான் பார்த்துத் தெரிந்து கொண்டேன் எனப் பொறுப்பற்றப் பதிலைக் கூறினார். துப்பாக்கிச் சூட்டுக்கு யார் அனுமதி கொடுத்தது போன்ற பல தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராமல் குழப்பமாகவே உள்ளது.
எனவே இது சம்மந்தமான வழக்கை தமிழக அரசிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா அமர்வு முன்னிலையில் நடந்தது.
இந்த விஷயத்தில் இரு தரப்பிலும் தவறு இருப்பதாக தெரிகிறது, இதனால் சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். எனவே வழக்கு கடந்த ஆகஸ்டு மாதம் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு சம்மந்தமான ஆவணங்களைக் கைப்பற்றிய சிபிஐ இன்னும் ஓரிரு நாளில் விசாரணையைத் தொடங்க இருந்த நிலையில் இன்று இதை எதிர்த்து தமிழக அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் இந்த வழக்கு சம்மந்தமாக விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றுவது தேவை இல்லாத ஒன்று. எனவே சிபிஐக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்து வழக்கு விசாரணையை தமிழக அரசே விசாரிக்க உத்தரவிடவேண்டும். தமிழக அரசின் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.