மிகப்பெரிய தலைகுனிவு ; சர்வதேச அவமானம் : - எடப்பாடி மீது சிபிஐ விசாரணை

வெள்ளி, 12 அக்டோபர் 2018 (16:57 IST)
நெடுஞ்சாலையில் துறையில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சம்பந்தி மற்றும் உறவினர்களுக்கு டெண்டர்களை கொடுத்து முறைகேடு செய்ததாகவும் திமுக தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 
இது தொடர்பான விசாரணையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் மீது திருப்தி இல்லை என்று கூறிய நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ -யிடம் ஒப்படைக்க வேண்டும் என இன்று உத்தரவிட்டது.
 
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
3120 கோடி ரூபாய் டெண்டர்களை தனது சம்பந்திக்கு கொடுத்த முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்கிறேன்.
 
தான் பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத்துறையில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு டெண்டர்களை தனது சம்பந்திக்கும், சம்பந்தி பார்ட்னராக இருக்கும் நிறுவனங்களுக்கும் அளித்தது தொடர்பாக முதலமைச்சரின் மீது 13.06.2018 அன்றே லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
 
ஆனால் அந்த புகாரினை முறையாக விசாரிக்காமல் - என் சம்பந்தி அரசு கான்டிராக்ட் எடுக்கக்கூடாதா? என்றெல்லாம் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி ஆணவத்துடன் வாதிட்டுக் கொண்டிருந்தார். லஞ்ச ஊழல் தடுப்புத்துறையில் பாலியல் புகாருக்கு உள்ளான ஐ.ஜி.யை வைத்தே அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் புகார் மீதான முதற்கட்ட விசாரணையை நடத்த வைத்து, "டெண்டர் விட்டத்தில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை" என்று உயர்நீதிமன்றத்திற்கே அறிக்கை கொடுக்க வைத்து லஞ்ச ஊழல் தடுப்புத் துறையையே கேலிக்கூத்தாக்கினார்.
 
தனக்குத்தானே நீதிபதியாகிக் கொண்ட முதலமைச்சரைப் பார்த்து நாடே வெட்கப்பட்டது. இவ்வளவும் போதாது என்று அரசு தலைமை வழக்கறிஞரையும் அவ்வாறே வாதாட வைத்து முதலமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்தை குறைத்து விட்டார்.
 
இந்திய முதலமைச்சர்கள் வரலாற்றில் சம்பந்திக்கு ஒப்பந்தம் - அதுவும் தான் வகிக்கும் துறையிலேயே கொடுத்தது முதலமைச்சர் திரு பழனிசாமி மட்டும்தான் என்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைகுனிவு. அதுமட்டுமின்றி உலக வங்கி நிதி அளித்துள்ள ஊழல் எதிர்ப்புவிதிகளை எல்லாம் அப்பட்டமாக மீறி, தமிழகத்திற்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்திய முதலமைச்சரும் இவரே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
 
ஆகவே சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி திரு பழனிசாமி உடனடியாக விலகி சுதந்திரமான ஊழல் விசாரணைக்கு வழி விட வேண்டும் என்றும், ஆதாரங்கள் அழிப்பிற்கு இடமளித்து விடாமல் காலதாமதமின்றி சி.பி.ஐ. இந்த டெண்டர் ஊழல் வழக்கின் ஆவணங்களைப் பெற்று விசாரணையை துவங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
 
3120 கோடி ரூபாய் ஊழல் புகாரில் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் முதலமைச்சர் பதவி விலக மறுத்தால், மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 
என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்