சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ், பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில், சொத்து பிரச்சினை காரணமாக ஒரு மருமகள் தனது மாமனார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பொய் புகார் அளித்தார். தனது 8 வயது மகளுக்கு மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டினார். இந்த வழக்கில், குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுமியிடம் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, தந்தைக்கும் தாத்தாவுக்கும் இடையே நடந்த சண்டையால், தாத்தாவை பழிவாங்கும்படி தந்தை பொய் சொல்ல சொன்னதாக சிறுமி வாக்குமூலம் அளித்தார்.
விசாரணையில், இந்த வழக்கே சொத்து தகராறில் இருந்து உருவாகியது என்பதும், மகன் தனது தந்தையின் சொத்துக்களை எழுதி வாங்குவதற்காகவே இந்த பொய் புகாரை அளித்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி என். மாலா எச்சரித்தார். மேலும், இந்த வழக்கில் பொய்ப் புகார் அளித்த சிறுமியின் பெற்றோர் மீது போக்சோ சட்டப் பிரிவு 22(1)-ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.