பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடி வரும் தூய்மை பணியாளர்கள், போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டதால், ரிப்பன் மாளிகை முன்பு காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 13 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில், அனுமதியற்ற இடங்களில் போராட்டம் நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது.
இந்த உத்தரவை அறிந்த பணியாளர்கள், தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும்வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளனர். இதனால், போராட்டம் நடைபெறும் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்வதால், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் மீண்டும் தூய்மைப் பணியாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த மறுபேச்சுவார்த்தை, போராட்டத்திற்கு ஒரு தீர்வை காண உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.