பா.ம.கவில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடங்கிய பண்ருட்டி வேல்முருகன் “என் வேலை என் உரிமை” என்ற போராட்டத்தை துவங்கி வைத்து அரசியலில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.
தமிழக அரசின் பணிகள் மற்றும் தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் அலுவலக பணிகளில் வெளிமாநிலத்தவர்களும், தமிழர்களும் பணி புரிகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அனைத்து மத்திய அரசு பணிகளுக்கும் நுழைவு தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் தமிழக அரசு பணிகளும் வெளி மாநிலத்தவருக்கு பறிபோகும் நிலைமை இருப்பதாக தெரிவித்துள்ள வேல்முருகன், வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என போராட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து வேல்முருகனின் ஆதரவு முகநூல் பக்கத்தில் ”
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு உறுதி சட்டம் இயற்ற வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக நீங்கள் #என்_வேலை_என்_உரிமை என்ற Hastag யை நாளை (13.9.19 --வெள்ளி) காலை 7 மணியளவில் Trand செய்யுங்கள்..” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதை தொடர்ந்து இன்று காலையிலிருந்து என் வேலை என் உரிமை என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. தமிழர்களுக்கு தமிழக அரசு வேலைகளில் 100% வேலைவாய்ப்பு, மத்திய மற்றும் தனியார் நிறுவனங்களில் 90% வேலைவாய்ப்பையும் உறுதிப்படுத்த வேண்டுமென அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.