என்.ஐ.ஏ. விசாரணைக்கு தேவையான உதவிகளை காவல் துறை செய்யும் என டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி.
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்தினர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த 19 பேருக்கு சைலேந்திர பாபு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கோவையில் கடந்த 23ம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கோவை மாநகர காவல் துறை துரிதமாக செயல்பட்டது. சம்பவ இடத்தை பாதுகாப்பாக வைத்து தடயங்களை சேகரித்தது. அதில் இறந்த நபர் யார் என்பதை கண்டுபிடித்தனர்.
6 குற்றவாளிகளை மிக துரிதமாக ஆதாரங்களை திரட்டி கைது செய்துள்ளனர். 5 பேரை காவலில் எடுத்து விசாரணை செய்து கொண்டுள்ளனர். இதில் நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் துரிதமாக துப்பு துலக்கி ஆதாரங்களை திரட்டி கைது செய்த காவல் துறையினர் பாரட்டு மற்றும் வெகுமதி வழங்கப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதல்வர் நேற்று பரிந்துரை செய்தார். உள்துறை செயலகம் இன்று என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவைக்கு வந்துள்ளனர். என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது. என்.ஐ.ஏ. வழக்கை விசாரிக்க நடவடிக்கை எடுக்கும். அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளை காவல் துறை செய்யும்.
புலன் விசாரணை விபரங்களை சொல்ல முடியாது. காவல் துறையினருக்கு கிடைக்கும் ஆதாரங்களை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்போம். இவ்வழக்கில் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தியது தொடர்பாக கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் கைது செய்துள்ளோம். என்.ஐ.ஏ. விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில், அவர்கள் கைது செய்வார்கள எனத் தெரிவித்தார்.