சுவாதியை தீர்த்துக்கட்ட வெறியுடன் பல நாட்களாக பின்னாலேயே சுற்றிய கொலைகாரன்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (10:57 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் பல அதிரடி தகவல்கள் வந்தவாறு உள்ளன. இதுவரை வந்த தகவலின் அடிப்படையில் பார்க்கும் போது சுவாதியை கொலை செய்ய அந்த நபர் பல நாட்களாக வெறியுடன் சுற்றி வந்தது தெரியவந்துள்ளது.


 
 
சுவாதியை பல நாட்களாக பின்னாலேயே சுற்றி வந்த அந்த நபர் தன்னை தெரிகிறதா என பலமுறை கேட்டுள்ளான். கோயிலில் சுவாதியை பின் தொடந்து வந்து என்னை தெரிகிறதா என கேட்டதாக கோயில் பூசாரி கூறியுள்ளார்.
 
இந்நிலையில் சுவாதியுடன் பணிபுரிந்த அவரது தோழி கூறிய வாக்குமூலத்தில், சுவாதியை கொன்ற கொலையாளியை 2 முறை பார்த்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
 
கடந்த 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் நானும் சுவாதியும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தபோது அந்த நபர் பின் தொடர்ந்து வந்ததை பார்தேன். அந்த நபர் என்னை பின் தொடர்ந்து வருகிறான், ஏன் என்று தெரியவில்லை. என்னை தெரிகிறதா என கேட்கிறான் ஆனால் உண்மையிலேயே அவன் யாரென்றே எனக்கு தெரியவில்லை என சுவாதி என்னிடம் கூறினாள்.
 
நான் அவனை கண்டிக்க வேண்டும், இதை சும்மா விடக்கூடாது என சுவாதியிடம் கூறினேன், ஆனால் சுவாதி அதை பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டாள். ஆனால் அவன் இப்படி கொடூரமாக கொலை செய்வான் என எதிர்பார்க்கவில்லை என சுவாதியின் தோழி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
 
மேலும் சுவாதியின் நண்பர் ஒருவரிடம் விசாரித்ததில், சுவாதி கடந்த 18-ஆம் தேதி கடைசியாக என்னிடம் போனில் பேசினாள் அப்போது ஒரு மர்ம நபர் தன்னை பின் தொடர்ந்து வருவதாகவும், கடந்த 10 மற்றும் 11-ஆம் தேதி தொடர்ச்சியாக பின் தொடர்ந்து வந்ததாகவும் கூறினாள் என தெரியவந்துள்ளது.
 
மேலும் அந்த நபர் சுவாதி பணிபுரிந்த அலுவலகத்துக்கு அருகில் சென்று நோட்டமிட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சுவாதி வேலைக்கு செல்ல பரனூர் ரயில் நிலையத்தில் இறங்கி தான் செல்வார். ரயில் நிலையத்தின் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தும் இடத்திலும் அந்த நபர் சுவாதியை பின் தொடர்ந்துள்ளான்.
 
இரண்டு நாட்களாக அந்த நபரை அங்கே பார்த்ததாக ஆட்டோ டிரைவர்கள் கூறுகின்றனர். சுவாதியை கொலை செய்ய பல நாட்களாக அந்த நபர் சுவாதியின் பின்னாலேயே வெறியுடன் சுற்றி வந்திருக்கிறான் என நடந்த சம்பவங்கள் உறுதிபடுத்துகின்றன.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்