பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

திங்கள், 29 ஜனவரி 2018 (10:37 IST)
பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி கொளத்தூரில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது.  சரியான முன்னறிவிப்பின்றி,  பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும், எதிர் கட்சி தலைவர்களும், மாணவர்களும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில் மக்கள் மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டங்களால், பேருந்து கட்டணத்தை குறைத்து, தமிழக அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. மிகக் குறைந்த அளவே பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லையென்றும் இந்த கட்டணக் குறைப்பு ஒரு கண்துடைப்பு நாடகமே என்று எதிர் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி இன்று திமுக சார்பில் தமிழகம் முழுவதுமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுகவுடன், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. 
 
திமுக சார்பில் கொளத்தூரில் நடைபெற்ற  போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்