சொத்து குவுப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா பெயரை சட்டசபையில் எப்படி கூறலாம் என திமுக குற்றம்சாட்டியது.
2017 - 2018 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட், எடப்பாடி தலைமையிலான அரசு தற்போது தாக்கல் செய்து வருகிறது. நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்தார். தற்போது பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.
இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் ஜெயலலிதா புகழ் பாடி ஆரம்பித்தார். பின் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
சசிகலா பெயரை குறிப்பிட்டதால் திமுக கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டனர். சொத்து குவிப்பி வழக்கில் தண்டனை பெற்று வரும் குற்றவாளி சசிகலா பெயரை சட்டசபையில் எப்படி குறிப்பிடலாம் என கோஷமிட்டனர். இதனால் சட்டசபைக்கு களங்கம் விளை விக்கப்பட்டுவிட்டதாக திமுக குற்றம்சாட்டியது.
இதனால் ஜெயக்குமார் பட்ஜெட் உரையை நிறுத்தினார். இதையடுத்து அவை முன்னவரான செங்கோட்டையன் பதிலளிக்க, சபாநாயகர் கேட்டுக் கொண்டார். இதனால் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
செங்கோட்டையன் ஆவேசமடைந்து தங்கள் கட்சி தலைமையை புகழ்ந்துரைப்பது, சட்டமன்ற மரபு என கூறினார். விளக்கம் வந்ததால் இருதரப்பினரையும் சபாநாயகர் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனாலும் திமுக-வினர் சற்று நேரம் தொடர்ந்து கூச்சலில் ஈடுப்பட்டனர்.
பின் நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் உரையை அமளிக்கு இடையில் படிக்க தொடங்கினார். அதன்பின்னரே திமுக அமைதி காத்துள்ளது.