தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், இப்போது புதுச்சேரியிலும் ஒரு சிறுமிக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி. என்ற வைரஸ், தற்போது இந்தியாவில் பரவி வரும் நிலையில், சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 5 வயது சிறுமி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல்நலம் தேறி வீடு திரும்பிய நிலையில், மீண்டும் கடும் காய்ச்சல், சளி, இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு ரத்தம் பரிசோதனை செய்ததில், எச்.எம்.பி.வி. வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் கூறிய போது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடும் காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமிக்கு ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.