காவல் துறை குறித்து அவதூறு வீடியோ.! பெண் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.!

Senthil Velan

ஞாயிறு, 2 ஜூன் 2024 (14:45 IST)
காவல்துறையினரை அவதூறாக  பேசிய விவகாரம் மற்றும் மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகளில் கைதான விஷ்வதர்ஷினி என்பவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வதர்ஷினி. இவர் ஃபேஸ்புக் மூலம் கோவை சேரன் மாநகரைச் சேர்ந்த செலினா என்பவருடன் பழகி வந்துள்ளார். அப்போது, தான் டைகர்வே என்ற டிரஸ்ட் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும் கூறியுள்ளார்.
 
இதனை நம்பி செலின் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை விஸ்வதர்ஷினியிடம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை திரும்பத் தராததால், செலினா சந்தேகமடைந்து கேட்ட போது, விஸ்வதர்ஷினி அவரை அவதூறாக பேசியதோடு, சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் செலினா மற்றும் காவல் துறையினரைத் திட்டி வீடியோ பதிவிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக செலினா அளித்த புகாரின் பேரில், கடந்த மே 8-ம் தேதி கோவை போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். விஷ்வதர்ஷினி கோவை காவல்துறைக்கு எதிராக பொது மக்களைத் தூண்டும் விதமாகவும், மிரட்டும் விதமாகவும், பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது.
 
மேலும் விஷ்வதர்ஷினி தொடர்ந்து பொது மக்களையும், காவல் துறையினரையும் மிரட்டுவதையும், அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இவரின் நடவடிக்கை கட்டுபடுத்தும் பொருட்டு கோவை மாநகர போலீஸார் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்தனர்.

ALSO READ: விடுமுறை தினம் எதிரொலி..! குற்றாலத்தில் அலைமோதும் கூட்டம்..!!

இதையடுத்து கோவை மத்திய பெண்கள் சிறையில் இருக்கும் விஷ்வதர்ஷினியிடம் இதற்கான உத்தரவினை போலீஸார் வழங்கினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்