புரோக்கர் வேலை பார்த்த கணவன்.. இளைஞனை மயக்கிய மனைவி! – திருமணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Prasanth Karthick

புதன், 29 மே 2024 (18:52 IST)
திருப்பூரில் மெக்கானிக் வேலை பார்த்து வந்த இளைஞரை திருமணம் செய்துகொள்வதாக பணத்தை ஏமாற்றி எஸ்கேப் ஆன பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் பாப்பனூத்து பகுதியை சேர்ந்தவர் 29 வயதான ராதாகிருஷ்ணன். மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் சில காலம் முன்னதாக இவரது மனைவி இவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ராதாகிருஷ்ணனுக்கு மறுமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளனர்.

அப்போதுதான் கேரளாவை சேர்ந்த திருமணம் புரோக்கர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டி, பெண் வீட்டினர் ஏழை என்பதால் நீங்கள்தான் நகை போட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அந்த பெண்ணின் அழகில் மயங்கிய ராதாகிருஷ்ணன் அதற்கு ஒத்துக் கொண்டு அந்த பெண்ணுக்கு ஒன்றரை பவுன் நகை போட்டு திருமணம் செய்து கொண்டதுடன், புரோக்கருக்கு ரூ80 ஆயிரம் கமிஷனும் கொடுத்துள்ளார்.

ALSO READ: 18 வயது நிரம்பாமல் வாகனம் ஓட்டினால் ஆர்.சி ரத்து.. லைசென்ஸ் கிடைக்காது! – ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகள்!

இந்நிலையில் முதலிரவுக்கு ராதாகிருஷ்ணன் ஆயத்தமான நிலையில் தனக்கு மாதவிடாய் உள்ளதாக கூறி முதலிரவை அந்த பெண் தள்ளி வைத்துள்ளார். அடுத்த நாள் தனது அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சென்று பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனால் ராதாகிருஷ்ணன் அந்த பெண்ணை அழைத்து சென்ற நிலையில் அங்கு அவர் மாயமாகிவிட்டார். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் நகை – பணத்திற்காக அந்த கும்பல் ராதாகிருஷ்ணனை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. புரோக்கராக நடித்தவர்தான் அந்த பெண்ணின் உண்மையான கணவனாம். இதுபோல பல இளைஞர்களுக்கு திருமண ஆசை காட்டி அந்த கும்பல் ஏமாற்றி இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்