அவசரநிலையை முறியடிக்க தேசிய அரசியல் பேசும் சீமான்...!!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (12:07 IST)
சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட், பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோரின் கைது நடவடிக்கைகளுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 
குஜராத் மத வெறிப்படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்கள் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட், அதோடு பாஜகவின் அவதூறுப்பரப்புரைகளைத் தோலுரித்து வரும் பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். 
 
அவர் கூறியிருப்பதாவது, டீஸ்டா செடால்வட் மற்றும் முகமது ஜூபைர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அறிவிக்கப்படாத அவசரநிலை போல, நாடு முழுக்க ஒரு அசாதாரண சூழலை உருவாக்கி, சனநாயகச்சக்திகள், சமூகச்செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மண்ணுரிமைப்போராளிகள் என யாவரின் குரல்வளையையும் நெரித்து, சனநாயகக்கோட்பாட்டைக் கேலிக்கூத்தாக்கி வரும் பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது, அரசாட்சியின் துணையோடு திட்டமிடப்பட்டு, அங்கு நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மக்களின் மதவெறிப்படுகொலைகளுக்கு நீதிகேட்டும், அதிகாரப்பலத்தின் மூலம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பும் பாஜகவின் தலைவர்களைத் தண்டிக்கக்கோரியும் சனநாயகப்போராட்டம் செய்து வரும் சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் அவர்களை கைது செய்திருப்பது அதிகார அத்துமீறலாகும். 
 
பாஜகவின் ஆட்சியதிகாரத்தின் கீழ் குஜராத்தில் வாழ்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இசுலாமிய பெருமக்கள் திட்டமிடப்பட்ட மதக்கலவரத்தின் மூலம் கொன்றொழிக்கப்பட்டு, இன்றுவரை அதற்கான நீதிகிடைக்கப்பெறாத நிலையில், அதற்காகப் போராடி வரும் சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட்டை பழிவாங்கும் நோக்கில் கைது செய்து, அவரது செயல்பாடுகளை மொத்தமாக முடக்க முயல்வது நாடெங்கிலுமுள்ள சனநாயகச்சக்திகளுக்கு விடப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும். 
சனநாயகத்தைக் காத்து, மக்கள் நலன் பேணுவதற்காக இயற்றப்பட்ட சட்டத்தைத் தங்களது போக்குக்கு வளைத்து, எதேச்சதிகாரப்போக்கையும், அடக்குமுறையையும், அரச வன்முறையையும் கட்டவிழ்த்துவிடும் பாஜக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் பேராபத்தானவையாகும்.
 
ஆல்ட் நியூஸ் செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனரும், பத்திரிக்கையாளருமான முகமது ஜுபைர் அவர்கள் திடீரென்று கைது செய்யப்பட்டிருப்பதும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் நாடெங்கிலும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இட்ட ட்விட்டர் பதிவு ஒன்றுக்காக விசாரணையென்றபேரில் அழைத்து, தற்போது புதிதாக வழக்குத்தொடுத்து சிறைப்படுத்தியிருப்பது அரசின் பழிவாங்கல் நடவடிக்கையின்றி வேறில்லை. 
 
நுபுர் சர்மாவின் நபிகள் குறித்தான அவதூறுப்பரப்புரையைத் தோலுரித்ததற்காகவே, இத்தகைய ஒடுக்குமுறை அவர் மீது பாய்ச்சப்பட்டிருக்கிறது என்பது ஐயப்பாடுகளுக்கு இடமின்றி, தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது. 
 
ஆகவே, மக்களாட்சித்தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்து, பாசிசப்போக்கை ஏவிவிடும்  பாஜக அரசின் சனநாயக விரோதச்செயல்பாடுகளுக்கு எனது வன்மையான எதிர்ப்பினைப் பதிவுசெய்து, சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் , பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோரின் கைது நடவடிக்கைகளுக்கெதிராக நாடு முழுவதுமுள்ள சனநாயகச்சக்திகள் ஒன்றுதிரண்டு, மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அறிவிக்கப்படாத அவசரநிலையை முறியடிக்கப் போராட்டக்களத்துக்கு வர வேண்டுமெனக்கூறி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அறைகூவல் விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்