காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை வெட்டி தானும் கழுத்தை அறுத்துக் கொண்ட வாலிபர்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2016 (13:00 IST)
வாலிபர் ஒருவர் தனது காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை வெட்டியதோடு, தானும் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
நாகர்கோவில் ராதாபுரத்தை அடுத்த வேப்பிலாங்குளத்தைச் சேர்ந்த சுடலைக்கண் (27). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
 
அந்த கல்லூரியில் வெள்ள மடத்தை அடுத்த ஆண்டார் குளத்தைச் சேர்ந்த செல்வகுமாரி (24) பி.எட் பட்டப்படிப்பு படித்துள்ளார். தற்போது, இவர் தேரூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
 
கல்லூரியில் படித்தபோது செல்வகுமாரியை சுடலைக்கண் ஒருதலையாக காதலித்து வந்தார். செல்வகுமாரி சுடலைக்கண் காதலை மறுத்து வந்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து சுடலைக்கண் செல்வகுமாரியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
 
இந்நிலையில், இன்று செல்வகுமாரி பள்ளிக்கு சென்றபோது சுடலைக்கண்ணு வழிமறித்துள்ளார். ஆனால், செல்வகுமாரி அவருடன் பேசாமல் அங்கிருந்து சென்றுள்ளார்.
 
இதனால், ஆத்திரமடைந்த சுடலைக்கண் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வகுமாரியை வெட்டியுள்ளார். இதில், வலியால் அலறி துடித்த செல்வகுமாரி அருகிலிருந்த வீட்டுக்குள் நுழைந்தார்.
 
சுடலைக்கண்ணை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். இதனால் பயந்து போன சுடலைக்கண், அரிவாளால் தனக்கு தானே கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
 
அடுத்த கட்டுரையில்