மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாதவர்கள், எப்படி கட்சியை காப்பாற்றுவார்கள் என ஜானகி எம்.ஜி.ஆரின் தம்பி மகன் தீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல் மரியாதை படத்தில் ரஞ்சனிக்கு ஜோடியாக நடித்திருந்த தீபனை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. இவர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளின் தம்பி மகன் ஆவார். எம்.ஜி.ஆர் மறைந்த போது, அவரது உடலை சுமந்து சென்ற ராணுவ வாகனத்தில் ஏறிய ஜெயலலிதாவை கீழே தள்ளியது இவர்தான்.
இந்நிலையில், சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா வந்ததில் மக்களுக்கு உடன்பாடு இல்லை. கட்சியிலும் அவரை நிறைய பேருக்கு பிடிக்கவில்லை. கட்சிக்குள் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காகவும், இரட்டை இலை சின்னம் கை விட்டு போய்விடக்கூடாது என்பதற்காகவும் அதிமுகவினர் அமைதியாக இருக்கிறார்கள்.
தனது சொந்த தேவைக்காக ஜெயலலிதாவை சசிகலா பயன்படுத்திக் கொண்டார். அவரின் உயிரை காப்பாற்ற முடியாத சசிகலா எப்படி கட்சியை காப்பாற்றுவார்?. தனது சுயநலம் காரணமாகத்தான் 75 நாட்கள் வரை அவரை யார் கண்ணிலும் காட்டாமல் வைத்திருந்தார் சசிகலா” என அவர் குற்றம் சுமத்தினார்.