சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது...
ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என அவர்கள் தீர்ப்பளித்தாலும், அவர் மரணம் அடைந்துவிட்டதால் இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது...
இந்நிலையில், இந்த தீர்ப்பிற்கு பின் சசிகலா தரப்பில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுக்கப்படும்?.. மேல் முறையீடு செய்ய முடியுமா? ஜாமீன் பெற முடியுமா? மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியுமா? உள்ளிட்ட சந்தேகங்கள் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது..
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்து கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா “ இது வரவேற்கத்தக்க தீர்ப்பு.. நீதித்துறை சுதந்திரமானது, அரசியல் சார்பற்றது. இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால், நீதிபதிகள் நீதியை நிலைநாட்டிவிட்டனர். சசிகலா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அதேபோல், இனிமேல், ஜாமீன் மனுவோ, சீராய்வு மனுவோ தாக்கல் செய்யவே முடியாது” என அவர் கூறியுள்ளார்.