சசிகலாவை முதலமைச்சராக்க அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தாலும் அவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நெருங்குவது தடையாக இருக்கிறது. ஒருவாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என அறிவிப்பு வந்ததும் தமிழகமே பரபரத்தது.
இந்த ஒரு வார இடைவெளியில் சசிகலா முதல்வராக பதவியேற்பாரா என்ற கேள்வி அப்போது எழுந்தது. அடுத்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக முடிந்து அவர் சிறை செல்ல நேர்ந்தால் மீண்டும் தனது பதவியை அவர் இழக்க நேரிடும் என்பதால் சசிகலா முதல்வராக கூடாது என பலர் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் ஆளுநர் சசிகலாவை முதல்வராக பதவியேற்க அழைப்பாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. இதனை காரணம் காட்டி சசிகலாவை ஆளுநர் காத்திருக்க வைக்கலாம் என கூறப்பட்டது. அதற்குள் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு சசிகலாவுக்கு எதிராக அமைந்துவிட்டது.
இருந்தாலும் ஆளுநர் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை கருத்தில் கொண்டு தான் முடிவு எடுப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் இன்றைய வழக்குகள் பட்டியலில் இந்த வழக்கு இடம்பெறவில்லை.
இந்நிலையில் வரும் 13 அல்லது 14-ஆம் தேதிகளில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு சசிகலா முதல்வர் ஆவாரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் என்பதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.