அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலா முதல்வராக வரும் 8 அல்லது 9-ஆம் தேதி பதவியேற்கலாம் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் ரொம்ப பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தொண்டர்களோ, மக்களோ தன்னை முதல்வராக ஏற்றுக்கொள்வார்களா என்பதை யோசிக்காமல் தான் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் சசிகலா. அதற்கான வியூகங்களை முன்பைவிட வேகமாக ஆரம்பித்து விட்டார் என்ற தகவல்கள் வருகின்றன.
இதற்காக தான் முதல்வர் பன்னீர்செல்வத்தை அவர் புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. முக்கிய நிர்வாகிகளின் ஆதரவை வைத்துள்ள சசிகலா தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எப்போது சென்னை வருகிறார் என்று நிர்வாகிகளிடம் கேட்டு அதன்படி பிப்ரவரி 8 அல்லது 9-ஆம் தேதி முதல்வர் பதவி ஏற்க தேதி குறித்து உள்ளார் என கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகைக்கும் இது தொடர்பான தகவல் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஆளுநர் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது. தற்போது முதல்வராக உள்ள பன்னீர்செல்வம் தானாக முன்வந்து ராஜினாமா செய்தால் மட்டுமே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதுவும் பன்னீர்செல்வம் நேரில் வந்து ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தால் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு ஆளுநருக்கு அறிவுறுத்தியிருப்பதாக பேசப்படுகிறது.
இந்நிலையில் சசிகலாவின் பழைய வழக்குகளை எடுத்து தூசி தட்டி அவருக்கு நெருக்கடி கொடுக்க மத்திய அரசு தயாராகிவிட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.