இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி 36 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த டிடிவி தினகரன் சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜாமீனில் வெளியே வந்த தினகரன் கட்சி பணிகளில் ஈடுபட உள்ளதாகவும், தன்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை எனவும் கூறினார். இதனையடுத்து பொதுச்செயலாளர் சசிகலாவை பெங்களூர் சிறையில் இன்று சென்று சந்தித்து பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் தன்னை சந்திக்க வரும் தினகரனை சசிகலா சந்திக்க அனுமதிப்பாரா என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. காரணம் சசிகலா தினகரன் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. யாரையும் ஆலோசிக்காமல் தனது விருப்பத்திற்கு ஏற்றார்போல் முடிவுகளை எடுத்து கட்சியை தினகரன் சிதைத்துவிட்டதாக சசிகலா அவர் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்கே நகர் தேர்தலில் தனது பேச்சையும் மீறி களம் இறங்கியது, அதில் தனது பெயரை புறக்கணித்தது, பணம் கொடுத்து மாட்டிக்கொண்டு தேர்தல் ரத்தானது என பல தவறுகளை தினகரன் செய்ததாக சசிகலா தரப்பு கூறுகிறது. இதனையடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எந்த காரியத்தையும் ஒழுங்காக செய்ய முடியாத தினகரன் எதற்கு தனது விருப்பத்தற்கு ஏற்றார்போல் யாரையும் ஆலோசிக்காமல் முடிவெடுக்கிறார் என சசிகலா தன்னை சந்திக்க வந்தவர்களிடம் புலம்பியதாக முன்னர் கூறப்பட்டது.
பின்னர் அமைச்சரிகள் தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்த பின்னர் தினகரன் சசிகலாவை சந்திக்க பெங்களூரு புறப்பட்டு சென்றார். ஆனால் சசிகலா தினகரனை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவர் பாதி வழியிலேயே சென்னை திரும்பிவிட்டார்.
அதே போல இந்த முறையும் தினகரன் சசிகலாவை சந்திக்கமுடியாமல் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. காரணம் ஜாமீனில் வெளியே வந்த தினகரன் மீண்டும் கட்சி பணியில் ஈடுபட உள்ளதாக அறிவித்தது தான். சிறையில் தினகரனை சந்தித்த நடராஜன் கூறிய அறிவுறைகளை மதிக்காமல் மீண்டும் கட்சியில் தீவிர பணியாற்ற உள்ளதாக தினகரன் கூறியது கட்சியினர் மட்டுமல்லாமல் சசிகலா குடும்பத்தினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தினகரன் யாருடைய பேச்சையும் கேட்காமல் செயல்படுவதால் கட்சி சின்னாபின்னமாகி வருவதாக சசிகலா தரப்பு நினைப்பதாகவும் இதனால் இன்றும் தினகரனை சந்திக்க சசிகலா அனுமதி வழங்கமல் புறக்கணிக்க வாய்ப்புகள் உள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.