போயஸ்கார்டனில் வருமான வரி சோதனை - நடந்தது என்ன?

சனி, 18 நவம்பர் 2017 (09:37 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கடந்த சில நாட்களாக சசிகலா குடும்பத்தினரை குறி வைத்து வருமான வரிதுறையினர் நடத்தி வரும் சோதனை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை, திருவாரூர், தஞ்சாவூர், மன்னார்குடி, திருச்சி என மொத்தம் 187 இடங்களில் 1600 அதிகாரிகள் நடத்தியது இந்தியாவின் மெகா ரெய்டாக பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று மாலை சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் ஷகிலா மற்றும் ஜெ.வின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், போயஸ்கார்டனில் உள்ள ஜெ.வின் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் எனக்கூறி அவர்கள் இருவரையும்  இரவு  9.10 மணியளவில் ஜெ. வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்து சென்றனர். 
 
அப்போது, ஜெ.வின் அறையில் சோதனை நடத்த வேண்டும் என அவர்கள் கேட்க, அதற்கு வாரண்ட் இருக்கிறதா என ஷகிலா கேட்டுள்ளார். வாரண்ட்டை இன்னும் சிறிது நேரத்தில் நாங்கள் பெற்றுவிடுவோம் எனக் கூறியுள்ளனர். ஆனால் கடைசி வரை அவர்களுக்கு வாரண்ட கிடைக்கவில்லை.


 

 
அந்நிலையில், டிடிவி தினகரன் இங்கே வரவேண்டும் என ஷகிலா கோரிக்கை வைக்க, அவர் அரசியலில் இருப்பதால் அவர் வேண்டாம் என அதிகாரிகள் மறுக்க, கிருஷ்ணப்பிரியா தனது சகோதரர் விவேக்கை அழைத்துள்ளார். அதன் பின்னர்தான் விவேக் இரவு 10 மணிக்கு போயஸ் கார்டன் சென்றார். கார்டன் அறையின் அனைத்து சாவிகளும் விவேக்கிடம்தான் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
 
அதற்குள் அங்கு தினகரனின் ஆதரவாளர்கள் கூடி சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மத்திய அரசிற்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் அவர்கள் கார்டனுக்குள் நுழைய முயல,  காவல் அதிகாரிகள் அவர்களை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். அதேபோல், இரவு 12 மணியளவில் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவும் அங்கு வந்தார். 
 
மொத்தம் 30 அதிகாரிகள் ஜெ.வின் வேதா நிலையத்தில் சோதனை நடத்தினர். இதில் சசிகலா தங்கியிருந்த அறையில் மட்டும் 10 அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் 75 காவல் அதிகாரிகள் வீட்டிற்கு வெளியே காவலுக்கு நின்றுள்ளனர். அந்த எண்ணிக்கையும் போகப்போக அதிகமானது.


 

 
வாரண்ட் இல்லாததால் ஜெ.வின் அறையில் அதிகாரிகளால் சோதனை நடத்த முடியவில்லை. முடிவில், 2 லேப்டாப்,  பென் டிரைவ், ஜெ.விற்கு வந்த சில அரசியல் கடிதங்கள் மற்றும் சில ஆவணங்களை மட்டும் அதிகாரிகள் எடுத்து சென்றதாக தெரிகிறது.
 
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய விவேக் ‘ இந்த சோதனைக்கு  யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதது வேதனை அளிக்கிறது’ என கருத்து தெரிவித்தார். இந்த சோதனை நடைபெற்ற போது அதிமுக மைச்சர்களில் ஒருவர் கூட அங்கு வரவில்லை. அவர்களைத்தான் விவேக் கூறியிருக்கிறார் எனக்கூறப்படுகிறது.
 
போயஸ்கார்டனில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சிறையில் உள்ள சசிகலாவிடம் விரைவில் அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் 1996ம் ஆண்டு ஜெ. வாழ்ந்த போயஸ் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் பின் 21 ஆண்டுகள் கழித்து தற்போது சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த சோதனை அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்