கத்தார் ஏர்வேஸ் விமானத்தில், முன்பதிவு செய்யப்பட்ட சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு வழங்கப்பட்டதால், அதை சாப்பிட்ட ஓய்வுபெற்ற இருதய நிபுணர் அசோகா ஜெயவீரா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து கொழும்புக்கு அசோகா பயணம் செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சைவ பழக்கம் கொண்ட இவர், விமான பயணத்துக்கு முன்பே சைவ உணவை முன்பதிவு செய்திருந்தார். ஆனால், விமான பணியாளர்கள் சைவ உணவு இல்லை என்று கூறி, இறைச்சியுடன் கூடிய அசைவ உணவை வழங்கியதாகவும், அதில் இறைச்சி அல்லாத பகுதிகளை மட்டும் சாப்பிடுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அந்த உணவை சாப்பிட்டபோது, அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். விமானம் ஸ்காட்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது மகன் கத்தார் ஏர்வேஸ் மீது வழக்குத் தொடுத்துள்ளார். முன்கூட்டியே ஆர்டர் செய்த உணவை வழங்காதது மற்றும் மருத்துவ அவசரத்தில் அலட்சியம் காட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார். இந்தச் சம்பவம் விமானப் பயணிகளின் உணவுப் பாதுகாப்பு குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளது.