அதிமுக அம்மா அணியிலேயே தற்போது சசிகலாவுக்கு எதிரான கோஷங்கள் எழும்ப ஆரம்பித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் எம்எல்ஏ முருகுமாறன் மற்றும் எம்பிக்கள் உள்ளிட்டோர் சசிகலாவுக்கு எதிராக பேசினர்.
இதற்கு அவர்களுக்கு கட்சியின் விதி தெரியாமல் எம்பிக்களாக உள்ளனர், ஜென்மங்கள் என்றெல்லாம் விமர்சித்தார் தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல். இதனையடுத்து இன்று எம்எல்ஏ முருகுமாறன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
10 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியின் நலனுக்காக உழைத்து வரும் எங்களை தேவையில்லாமல் வெற்றிவேல் எம்எல்ஏ பேசக்கூடாது. கட்சியின் விதி தெரியாமலா கடந்த 10 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன்?. பொதுச்செயலாளர் பதவிக்கான விதி என்ன என்பது எங்களுக்கு தெரியும். அதனை வெற்றிவேல் சொல்லி தர வேண்டியதில்லை என்றார்.
மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவில் தங்கள் வாரிசுக்கள் யாரையும் களமிறக்கவில்லை. பொதுச்செயலாளர் சிறைக்கு சென்ற பிறகு அவரது உறவினரை கட்சி பதவியில் நியமித்தது தவறானதாகும். வாரிசு அரசியலை அதிமுகவிற்குள் புகுத்தியதால் சசிகலாவை எதிர்க்கிறோம் என்றனர். தொடர்ந்து பேசிய அவர்கள் ஆர்.கே.நகர் தேர்தலில் பொதுச்செயலாளர் பெயரை ஏன் பயன்படுத்தவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்கள்.