தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் எதிர்காலம் குறித்து துக்ளக் இதழ் தலையங்கம் ஒன்று வெளியிட்டுள்ளது.
சசிகலா பொதுச்செயலாளராக வர இருப்பதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நிர்வாகிகள் சிலர் தான் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமிக்க முயற்சி எடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவால் வீட்டை விட்டு துறத்தப்பட்ட சசிகலாவை ஏற்க மறுக்கின்றனர் தொண்டர்கள்.
இந்நிலையில் துக்ளக் இதழில் வெளியான தலையங்கத்தில் சசிகலா நடராஜன் குடும்பத்தினர் தனக்கெதிராக சதி செய்தது அம்பலமானதால் ஜெயலலிதா அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினார்.
சசிகலா நடராஜன் குடும்பத்தின் சதி பற்றி மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ ராமசமியிடம் ஜெயலலிதா கூறியதாகவும் அவர் தனது நண்பர்களிடம் இது குறித்து கூறியதாகவும் துக்ளக் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தான் அரசியலுக்கு வர மாட்டேன் பதவி ஆசையே இல்லை, அக்காவுக்கு சேவை செய்வதே நோக்கம் என கூறிவிட்டு மீண்டும் போயஸ் கார்டன் வந்த சசிகலா தற்போது அதிமுக பொதுச்செயலாளராக முயற்சி செய்வதை விமர்சித்துள்ளது அந்த தலையங்கம்.