வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சொத்து ஆவணங்கள்? - சசிகலா குடும்பம் மீது இறுகும் பிடி

திங்கள், 20 நவம்பர் 2017 (09:41 IST)
சசிகலா உறவினர்கள் வாங்கிக் குவித்த சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதற்கான ஆதாரங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
சசிகலா குடும்பம் மற்றும் உறவினர்களிடம் சமீபத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1430 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும், ஏராளமான தங்க, வைர நகைகள் மற்றும் பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்துகளின் ஆவணங்களும் சிக்கியதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. மேலும், உச்சகட்டமாக, போயஸ்கார்டனில் அதிகாரிகள் சோதனை செய்ததில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், சசிகலா உறவினர்கள் வாங்கிக் குவித்த சொத்துகள் தொடர்பான பல அசல் ஆவணங்கள், சிங்கப்பூர் மற்றும் துபாயில் உள்ள சிலருக்கு நான்கு மரப்பெட்டிகளில், தனியார் கூரியர் நிறுவனம் வாயிலாக, விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 
 
துபாயில் சசிகலாவிற்கு நெருக்கமான பல உறவினர்கள் வசித்து வருகிறார்கள். முக்கியமாக, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் அங்கு உள்ளன. அங்குதான், இந்த ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது. அதற்கான ரசீதுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 
 
எனவே, மத்திய அரசு மற்றும்வெளியுறவுத்துறையின் அனுமதி பெற்று துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் ஆவணங்கள் அனுப்பப்பட்ட முகவரியில் உள்ளவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விரைவில் விசாரணையில் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்