அமமுகவை கட்சியாக பதிவு செய்த டிடிவி தினகரன், இப்போது கட்சியின் நிர்வாகிகளை நியமிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். ஏற்கனவே செந்தில் பாலாஜி கட்சியைவிட்டு விலகிய நிலையில் சமீபத்தில் தங்க தமிழ்ச்செல்வனும் இசக்கி சுப்பையாவும் விலகினர்.
இந்நிலையில், ஏற்கனவே வைத்திருந்த நிர்வாகிகள் பட்டியலில் மாற்றத்தை மேற்கொண்டு புது பட்டியலை உருவாக்கியுள்ளார் தினகரன். இதற்கு ஒப்புதல் பெற நேற்று சசிகலாவை சந்தித்துள்ளார். ஆனால், சசிகலா நிர்வாகிகளின் பட்டியலில் பல மாற்றங்களை மேற்கொண்டாராம்.
அதேபோல், இனி எந்த முடிவு எடுத்தாலும் தன்னை கேட்டே எடுக்க வேண்டும் என்றும், என்னுடன் ஆலோசித்து பின்னர் முடிவுகளை வெளியில் கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுக, திமுக தங்களது கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி கொண்டு சென்றுள்ள நிலையில், இப்போது சசிகலா சிறையில் இருந்தாலும் நேரடியாக கட்சி பணிகளில் ஈடுப்பட்டிருப்பது அமமுகவை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.