நிலவை ஆய்வு செய்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2:35 மணக்கு எல்.வி.எம்-3 ராக்கெட்டுடன், சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு திட்டமிட்டபடி வெற்றிகரமாக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ள சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக விளங்கிய தமிழக விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குனருமான விழுப்புரத்தை சேர்ந்த திரு.வீர முத்துவேல் அவர்களுக்கும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற சாதனையை படைத்து நம் இந்திய தேசத்திற்கு பெருமை சேர்க்க இருக்கும் சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலப்பரப்பில் இறங்கும் அந்நன்னாளை எதிர் நோக்கி நம் அனைவரும் காத்திருப்போம். வல்லரசு நாடுகளுக்கு இணையாக, நிலவை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில், நம் இந்திய தேசமும் தொடர்ந்து சாதனை படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.