தினகரனை சந்திக்க மறுத்த சசிகலா? - பின்னணி என்ன?

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2017 (18:45 IST)
பெங்களூர் சிறையிலிருக்கும் தன்னை பார்க்க வந்த தினகரனை, சசிகலா சந்திக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்ட போது, தினகரனை அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமித்து விட்டு சென்றார் சசிகலா. அதன்பின் அதிமுகவின் தலைமையாக செயல்பட்டார் தினகரன். 
 
ஆனால், நடராஜன், திவாகரன் மற்றும் உறவினர்களை ஒதுக்குவது, இரட்டை இலை சின்னத்தை பறி கொடுத்தது, ஆர்.கே.நகர் தேர்தலில் நின்றது, வெற்றி பெறுவதற்காக பணப்பட்டுவாடா செய்தது, ஆதாரங்களோடு சிக்கி தேர்தல் ரத்தாக காரணமாக இருந்து, விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட சோதனை என பல விவகாரங்களில் தினகரன் மீது சசிகலா கோபமாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. அந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி பேரம் பேசியதாக தற்போது அவர் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சுகேஷ் சந்தர் என்பவரை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும், நாளை சென்னை வரும் டெல்லி போலீசார் இதுபற்றி தினகரனிடம் விசாரணை செய்ய இருக்கிறார்கள்.
 
இந்நிலையில்தான், சசிகலாவை சந்திக்க இன்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார் தினகரன். ஆனால், அவர் மீது கோபத்திலிருக்கும் சசிகலா அவரை சந்திக்க மறுத்து விட்டதாகவும், இதனால் பெங்களூரில் விடுதியில் அறை எடுத்து தினகரன் தங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்