சோலார் பேனல் மோசடியில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கத்திற்கு தொடர்பு இருக்கிறது என்று நடிகை சரிதா நாயர் குற்றம்சாட்டியுள்ளார்.
திரைப்பட நடிகை சரிதா நாயர், கோவையில் ஐசிஎம்எஸ் எனும் பெயரில் சூரிய மின்சக்தி உபகரணங்களை விற்பனை செய்து வந்தார். இவரிடம் கோவையை சேர்ந்த தியாகராஜன் மில்ஸ் சேர்மன் தியாகராஜன் ரூ. 28 லட்சம், உதகையை சேர்ந்த ஸ்ரீ அபு பாபாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் வெங்கட் ரமணன், ஜோயோ ஆகியோர் ரூ. 5.50 லட்சம் ரொக்கப் பணத்தினை சோலார் பேனல் அமைப்பதற்காக கொடுத்தனர்.
ஆனால், சரிதா நாயர் சோலார் பேனல் அமைக்கவோ, பணத்தை திருப்பித் தரவோ இல்லை. இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சரிதா நாயர், கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர். இந்த மோசடி வழக்கு, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், சோலார் பேனல் வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜரானார். இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரிதா நாயர், ”சோலார் பேனல் மோசடி வழக்கில், உம்மன் சாண்டி முக்கிய குற்றவாளி. இந்த மோசடியில் முன்னாள் திமுக அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கு தொடர்பு உள்ளது.
பழனி மாணிக்கத்திற்கு எதிரான ஆதாரத்தை சோலார் கமிஷனில் ஒப்படைத்துள்ளேன். முறைகேட்டில் சிக்கிய 13 பேரில் 9 பேருக்கு எதிராக ஆதாரம் உள்ளது. சோலார் பேனல் மோசடி குறித்த விசாரணை அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் தாக்கலாகும்” என்றார்.