'பெண்ணுரிமைப் போராளி' - குவாண்டீல் பலோச்சுக்கு பெருகும் ஆதரவு

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (01:09 IST)
சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருந்த குவாண்டீல் பலோச்சின் கொலைக்கு எதிராக பாகிஸ்தான் முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
 

 
சுதந்திரமான பேச்சு பற்றித் தொடர்ந்து வலியுறுத்தி வந்த குவாண்டீல் பலோச், இரண்டு நாட்களுக்கு முன்பாக அவரது தம்பி வாசிம் அகமதுவால் கொலை செய்யப்பட்டார். இது ஆணவக் கொலை என்று வர்ணிக்கப்படுகிறது. இந்தக் கொலை பாகிஸ்தான் மக்கள் மத்தியில், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
கொலைக்குப் பின்னால் அவரது சகோதரர் வாசிம் அகமது கூறுகையில், ’கொலையைச் செய்தது உண்மைதான். குவாண்டீலின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். எதுவாக இருந்தாலும் சரி, அவளது நடவடிக்கைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெண்கள் பிறப்பதே வீட்டிற்குள் இருந்து கொண்டு, குடும்பப் பழக்கங்களை பின்பற்றி குடும்பத்திற்கு கவுரவம் சேர்ப்பதற்காகத்தான்’ என்று தெரிவித்திருந்தார்.
 
உள்நாட்டில் பல்வேறு மிரட்டல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால், தனது பெற்றோர்களோடு வெளிநாட்டிற்குச் சென்று விடலாமா என்று குவாண்டீல் திட்டமிட்டிருந்தார். அதற்குள் சகோதரர் வாசிம் அகமதுவால் அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார்.
 
இது குறித்து சில நாட்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், “இங்கு எனக்குப் பாதுகாப்பில்லை. பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. எனவே ஈத் பெருநாளுக்குப் பிறகு வெளிநாட்டிற்குச் சென்று விடுவது என்று முடிவெடுத்துள்ளேன்“ என்று குவாண்டீல் குறிப்பிட்டிருந்தார்.
 
மாதர் அமைப்புகள் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் 1,700 பேர் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
 
அதில், "அவள் எங்கள் குவாண்டீல், உழைக்கும் பெண்களில் ஒருவர், மூன்றாம் உலகத்தின் பெண்ணுரிமைப் போராளி, தான் செய்ய வேண்டும் என்று நினைத்ததைத் தைரியமாகச் செய்தவர். அவரது உயிருக்கு மிரட்டல் இருந்தபோதும் பயப்படாமல் தனது கருத்தைச் சொன்னவர் என்று பாராட்டியுள்ளனர்.

மேலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கக்கூடாது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்