மீண்டும் சங்கர ராமன் கொலை வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மனு!

Webdunia
வெள்ளி, 26 ஜனவரி 2018 (21:17 IST)
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு காஞ்சி விஜயேந்திரர் மரியாதை செலுத்தவில்லை என்ற சர்ச்சை ஓய்வதற்குள் அவர் மற்றும் ஜெயேந்திரர் தொடர்புடைய சங்கர ராமன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
காஞ்சி சங்கர மடத்தில் பணியாற்றிய சங்கரராமன், ஜெயேந்திரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மடத்திலிருந்து வெளியேறினார். பின்னர் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக பொறுப்பேற்ற அவர் 2004-இல் கோயில் வளாகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
 
இந்த கொலையில் சதி திட்டம் தீட்டியதாக ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
 
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சங்கராச்சாரியார் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதன் பின்னர் புதுச்சேரி நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
 
புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரும் கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பரில் விடுதலை செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில் சங்கராச்சாரியார்கள் இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
அவர் தனது மனுவில் இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் மீது சந்தேகம் இருப்பதாகவும், மேலும் வழக்கில் ஆள்மாறாட்டம், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேர் பிறள் சாட்சியாக மாறினர் போன்றவை நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
விசாரணையில் மேலும் பல குளறுபடிகள் நடந்ததால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் மணிகண்டன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்