தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

Prasanth K

வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (12:51 IST)

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கைது விவகாரத்தில் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

 

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்பந்தத்திற்கு விடுவதை எதிர்த்து ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களோடு, அவர்களுக்கு ஆதரவாக வந்து நின்ற வழக்கறிஞர்கள், மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர்கள் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அதற்கு பதிலளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் வழக்கை பிற்பகல் விசாரிப்பதாக தெரிவித்தனர்.

 

மேலும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தும்போது கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தியிருந்தபோதும், அவர்கள் அத்துமீறி செயல்பட்டதாகவும், அதனால் போராட்டம் நடத்த மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி அமர்வு, தூய்மை பணியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்த உரிமை உண்டு. ஆனால் அனுமதி பெறாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அனுமதி பெற்று நடந்த போராட்டத்தில் காவல்துறை தடுத்திருந்தால் நீதிமன்றம் தலையிடும். அனுமதியில்லா போராட்டத்தில் எந்த மனுவும் இல்லாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் மறுத்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்