சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் மாணவர்களும் களம் இறங்கியுள்ளதால் மேலும் பரபரப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளுக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு அளிப்பதற்கு கண்டனம் தெரிவித்தும், நிரந்தர பணி நியமனம் கோரியும் சென்னை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ப்ளாட்பாரத்தில் கடந்த 1 வார காலத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாளுக்கு நாள் போராட்டத்திற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வரும் நிலையில் சமீபமாக சினிமா நட்சத்திரங்கள், நாதக சீமான், தவெக விஜய் என பலரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
அதேசமயம் தனியாருக்கு வழங்குவதால் பணியாளர்களுக்கு பல விதத்தில் சலுகைகள் கிடைக்கும் என்றும் தூய்மை பணியாளர்கள் மீண்டும் பணிக்கு வரவேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதை தூய்மை பணியாளர்கள் புறக்கணித்த நிலையில் தற்போது SFI உள்ளிட்ட மாணவர் அமைப்புகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளனர். தொடர்ந்து பல பகுதிகளிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பலரும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொள்ள முனைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் இந்த போராட்டம் இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டம் போல பூதாகரமான போராட்டமாக வெடிக்குமா? அதற்கு மாநகராட்சி தூய்மை பணியாளர்களை அமைதிப்படுத்தி போராட்டத்தை கைவிட செய்யுமா? என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளது.
Edit by Prasanth.K