ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்திற்குள் சட்டவிரோதமாக இயங்கி வந்த போதைப்பொருள் தயாரிப்பு ஆலையை போதைப்பொருள் சட்ட அமலாக்கத்திற்கான எலைட் ஆக்ஷன் குரூப் குழு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள், பணம் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மெதா பள்ளி உரிமையாளரும், மஹபூப்நகர் மாவட்டத்தை சேர்ந்தவருமான மல்லேல ஜெய பிரகாஷ் கௌட் என்பவர்தான் இந்த சட்டவிரோதச் செயலை நடத்தியவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெய பிரகாஷ், குருவரெட்டி என்பவருடன் இணைந்து, அல்ப்ராசோலம் தயாரிப்பதற்கான செய்முறையைப் பெற்றுள்ளார். அதிக லாபத்திற்காக, ஜெய பிரகாஷ் பள்ளியின் ஒதுக்குப்புறமான பகுதியில் இந்த போதைப்பொருளை தயாரித்து, மஹபூப்நகர் மாவட்டத்தின் பூத்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கள்ளுக்கடைகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த திடீர் சோதனையின்போது, அதிகாரிகள் 3.5 கிலோ எடை கொண்ட அல்ப்ராசோலம், 4.3 கிலோ அரைப் பதப்படுத்தப்பட்ட மாத்திரைகள், மூலப்பொருட்கள், உற்பத்தி உபகரணங்கள் மற்றும் ரூ. 21 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.