சேலம் வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கில் 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சேலம் போலீசார் தாக்கல் செய்திருந்தனர். மேலும் குற்றப்பத்திரிகையின் நகல்கள், குற்றம் சாட்டப்பட்ட 30 பேருக்கும் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்த முதலீட்டில் அதிக பணம் கிடைக்கும் என 1686 பேரை மோசடி செய்து ரூ.200 கோடி வரை சுருட்டியதாக வின்ஸ்டார் நிறுவன உரிமையாளர் சிவக்குமார் உள்பட 30 பேர் மீது வழக்கு நடந்து வருகிறது
கடந்த 2015, 2016ம் ஆண்டுகளில் சிவகுமார் என்பவர் சேலத்தில் இந்தியா சிபி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரே வருடத்தில் பணத்தை இரட்டிப்பாகும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். இதனை நம்பி சுமார் 3500 க்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்தனர். இந்த தொகை ரூ.500 கோடி என்று கூறப்படுகிறது.
ஆனால் வாக்குறுதி அளித்தபடி பணத்தை திரும்ப வழங்காமல் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர்.
அதனை அடுத்து சிவக்குமார் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு சில நாட்களிலேயே ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.