ரூ. 25 கோடி ஹவாலா பணம் - நகைக் கடைகளில் அதிரடி சோதனையில் பறிமுதல்

Webdunia
சனி, 12 நவம்பர் 2016 (13:21 IST)
பாரி முனை மற்றும் வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 25 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு திடீரென்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அதிரடியாய் அறிவித்தது. அதைத்தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கோள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை [10-11-16] முதல் மக்கள் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இதன்மூலம் வரி செலுத்தாமல் கணக்கில் வராத பணங்களை மாற்றும் போது அவர்கள் மாட்டிக் கொள்வார்கள்.

இதனால் பலர் ரூபாய் நோட்டுகளை மூட்டையாக மூட்டையாக குப்பைகளில் தூக்கி போட்டு வருகின்றனர். மேலும், உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களிடம் உள்ள பணத்தை நகையாக மாற்றும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கினர்.

இதனால், நகை விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. இதனையடுத்து, தங்கம் வாங்குபவர்கள், தங்களது பான் எண்ணை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது. மேலும் இது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வந்தது.

இந்நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள நகை கடைகள் மற்றும் ஹவாலா பரிமாற்றத்தில் தொடர்புடையவர்கள் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த அதிரடி சோதனையில், பாரிமுனை, வடபழனி உள்ளிட்ட பல பகுதிகள் உள்ள நகைக்கடைகள் மற்றும் ஹவாலா பணம் பரிமாற்றத்தில் ஈடுபடும் நபர்களின் இல்லங்களில் ரூ.25 கோடி வரை ஹவாலா பணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்