அழகிரிக்கு என்ன ஆதங்கம்? : திமுகவில் நடப்பது என்ன?

திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (13:28 IST)
திமுக கட்சி தொடர்பான என் ஆதங்கத்தை 2 அல்லது 3 நாட்களில் கூறுவேன் என அழகிரி கூறியிருப்பது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
திமுகவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த மு.க.அழகிரியை கருணாநிதி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். ஆனாலும், திமுக மற்றும் ஸ்டாலினை தொடர்ந்து விமர்சித்து வந்த அழகிரி, கருணாநிதியே என் தலைவர் என தொடர்ந்து கூறிவந்தார்.
 
இந்நிலையில்தான், கருணாநிதி உடல் பின்னடைவை சந்தித்த போது மருத்துவமனையில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி அனைவரும் ஒன்றாக செயல்பட்டனர். குறிப்பாக அழகிரி கூறிய சில ஆலோசனைகளை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இது, திமுக தொண்டர்கள் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 
 
கருணாநிதியின் இறுதி நிகழ்ச்சியின் போதும் ஸ்டாலின், கனிமொழி, அழகிரி ஒற்றுமையாக இருந்தனர். 2 நாட்களுக்கு முன்பு கருணாநிதியின் சமாதிக்கு மூவரும் ஒன்றாக வந்து மாலை அணிவித்து சென்றனர். எனவே, ஸ்டாலின், அழகிரி ஆகியோருக்கிடையே இருந்த மனக்கசப்பு நீங்கிவிட்டதாக கருதப்பட்டது.

 
அதேபோல், கருணாநிதியின் மறைவுக்கு பின் ஸ்டாலினுக்கு தலைவர் பதவி மற்றும் அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட இருக்கிறது எனவும், நாளை நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 
 
இந்நிலையில்தான், இன்று காலை கருணாநிதியின் சமாதிக்கு வந்து தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளதாக அழகிரி தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஸ்டாலினுடனான அவரின் பிணக்கு இன்னும் சரியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது. 
 
அதாவது, அழகிரி நீட்கப்பட்ட போது அவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களும் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் சிலருக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அழகிரி விரும்புகிறாராம்.  ஆனால், திமுக தரப்பில் இருந்து அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. அவ்வளவு ஏன்? அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவாரா என்பது கூட இன்னும் தெளிவாக தெரியவில்லை.

 
கருணாநிதி மறைந்துள்ள இந்த சூழ்நிலையில், கட்சியில் பிளவுகள் இன்றி ஸ்டாலினும், அழகிரியும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என கருணாநிதியின் குடும்பத்தினர் கருதுகிறார்கள். ஆனால், ஸ்டாலின் என்ன நினைக்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை. இதுதான் அழகிரிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. 
 
அதோடு, மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு, பழையபடி மதுரையில் திமுகவின் அதிகார மைய புள்ளியாக தான் செயல் பட வேண்டும் என அழகிரி கருதுகிறார். ஆனால், ஸ்டாலின் மௌனம் அவரை ஆதங்கப்பட வைத்திருப்பதாக தெரிகிறது. அதனால்தான், ஆதங்கம் என்ற வார்த்தையை அவர் கூறியுள்ளார்.
 
திமுகவின் செயற்குழு கூட்டம் நாளை கூடவுள்ள நிலையில், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தனது ஆதங்கம் பற்றி கூறுவேன் என அழகிரி தெரிவித்துள்ளார். 
 
அதாவது, செயற்குழு கூட்டத்தில் தான் கட்சியில் சேர்க்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை எனில், அவர் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பான கருத்துகளை வெளியிடுவார் என்பதால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்