என்ன ஆதங்கம்? ; 2 நாட்களில் சொல்கிறேன் : கெடு விதிக்கும் அழகிரி

திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (12:53 IST)
திமுக கட்சி தொடர்பாக தன்னுடைய ஆதங்கம் என்ன என்பதை விரைவில் கூறுவதாக மு.க.அழகிரி கூறியிருக்கிறார்.

 
திமுக தலைவராக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கருணாநிதி கடந்த 7ஆம் தேதி முதுமை மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார். இதையடுத்து புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது பற்றி ஆலோசனை நடத்த தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம்  நாளை  நடைபெறுகிறது. 
 
இந்த செயற்குழு கூட்டத்தில் திமுகவின் புதிய தலைவர் யார் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரிக்கு கட்சியில் முக்கிய பதவி அளிக்கப்படும் என பேசப்பட்டு வந்த நிலையில் இன்று கருணாநிதியின் நினைவிடத்திற்கு குடும்பத்தினருடன் வந்த மு.க.அழகிரி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்.  
 
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “என் தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன். கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் என் பக்கமே உள்ளனர்” என கூறினார். தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் திமுகவிலே இல்லை ஆகவே அதை பற்றி கூற முடியாது என பேசிவிட்டு சென்றார்.
 
அப்போது, உங்களின் ஆதங்கம் கட்சி தொடர்புடையதா இல்லை சொந்த வாழ்க்கை தொடர்புடையதா? என ஒரு நிருபவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கட்சி தொடர்புடையதுதான் என அழகிரி பதிலளித்திருந்தார்.
 
அதன் பின் அவர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு வந்தார். அப்போது, அவரின் ஆதங்கம் பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு  “கட்சி தொடர்பான என் ஆதங்கத்தை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் சொல்கிறேன்” என பதிலளித்தார். அதேபோல், கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு “நான் கட்சியிலேயே இல்லை” என அவர் பதிலளித்தார்.
 
இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அழகிரி பரபரப்பான பேட்டி ஒன்றை கொடுக்கப்போகிறார் என்பதால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்