நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் கொலையாளி பயன்படுத்திய அரிவாளில் 2 பேரின் ரத்தம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
சுவாதி கொலை வழக்கில் தினமும் பல்வேறு திருப்பங்களும், தகவல்களும் வந்தவாறு உள்ளன. சுவாதியை கொலை செய்த வழக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாதியை வெட்ட பயன்படுத்திய அரிவாளில் 2 பேரின் ரத்தம் படிந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று சுவாதியின் ரத்தம் என்று தெரியவந்துள்ளது. எனவே, அந்த இன்னொரு ரத்தம் ராம்குமாருடையது தானா என்பதை உறுதிபடுத்துவதற்காக ராம்குமாரின் இரத்த மாதிரி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டதாக காவல்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
இது வரை ராம்குமாரிடம் நடந்த விசாரணையில், சுவாதியை வெட்டிய பின்னர் தனக்கோ, வேறு யாருக்கோ அந்த அரிவாளால் காயம் ஏற்பட்டதாக கூறப்படவில்லை. இந்நிலையில் அரிவாளில் 2 பேரின் இரத்தம் இருப்பதாக கூறப்படும் இந்த தகவல் சுவாதி வழக்கில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.