பிரபல நடிகர் கலாபவன் மணி (45) தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
கலாபவன் மணியின் மரணம், அதிக மதுவால் ஏற்பட்டதில்லை, கடும் விஷமுள்ள ரசாயன பொருள்கள் உள்கொண்டதாலேயே மரணம் சம்பவித்தது என்பதை உடல் உள்ளுறுப்பு பரிசோதனையில் தெரிய வந்தது. கலாபவன் மணி தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டரா என்பதை கேரள மாநில போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்று கலாபவனின் மனைவியும், சகோதரரும் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர். இதனிடையே கலாபவன் மணியின் மரணத்திற்கு அவரது நண்பர்கள் காரணம் என அவரது சகோதரர் குற்றம் சாட்டினார். மேலும் கலாபவன் மணியின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த கோரி, கேரள மனித உரிமை ஆணையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரள தலைமை காவல்துறை அதிகாரி லோக்நாத் பெகரா மனித உரிமை ஆணையத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்து இதுவரை 290க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கலாபவன் மணியின் 6 நண்பர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.