தீரன் சின்னமலையின் 219வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளனர்.
தீரன் சின்னமலையின் 219வது நினைவு நாள் குறித்து டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:
ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 219-ஆவது நினைவுநாள் இன்று. தீரன் சின்னமலை என்றாலே அவரது வீரமும், வெற்றிகளும் தான் நினைவுக்கு வரும்.
1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று தூக்கிலிட்டனர். ஒரு தீரன் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று.
தீரன் சின்னமலையில் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்!
தீரன் சின்னமலையின் 219வது நினைவு நாள் குறித்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
புரட்சியாளன் தீரன் சின்னமலையில் 219-ஆவது நினைவு நாளில், அநீதிகளைக் களையவதற்கு உறுதியேற்றுக் கொள்வோம்!
இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஈடு இணையற்ற புரட்சியாளர் தீரன் சின்னமலை எனப்படும் தீர்த்தகிரி கவுண்டர் சூழ்ச்சியாலும், சதியாலும் வீழ்த்தப்பட்டதன் 219-ஆம் நினைவு நாள் இன்று. ஆங்கிலேயர்களைக் கண்டு பிற மன்னர்கள் அஞ்சிய நிலையில், ஆங்கிலேயர்களை அடுத்தடுத்து மூன்று போர்களில் வீழ்த்தி அஞ்ச வைத்த வரலாறு தீரனுக்கு உண்டு.
வீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த அவர், கொடைகளை வழங்குவதில் கோமானாக திகழ்ந்தார். தன்னிடமிருந்த பணத்தை மக்களுக்கு வாரி வழங்கியவர். கொங்கு நாட்டில் இருந்து மைசூர் மன்னரால் வசூலித்துச் செல்லப்பட்ட வரிப்பணத்தை பறித்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய வீரன் சின்னமலை.
இளம் வயதிலேயே எண்ணற்ற சாதனைகளை படைத்து, வரலாற்றில் இடம் பெற்ற தீரன் சின்னமலையில் தியாகங்கள் இன்னும் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை. அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியதும், அவரைப் போலவே அநீதிகளை எதிர்த்து போராட வேண்டியதும் நமது கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற இந்த நாளில் நாம் உறுதியேற்றுக் கொள்வோம்!