மிரட்டிய பீட்டா: பின்வாங்கிய ரஜினி ரசிகர்கள்!

வெள்ளி, 5 ஜனவரி 2018 (18:14 IST)
மதுரையில் கிடா வெட்டி விருந்து வைக்க இருந்த ரஜினி ரசிகர்கள், பீட்ட ரஜினிக்கு எழுதிய மிரட்டல் தொனியிலான கடிதத்துக்கு பின்னர், அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளனர்.
 
கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக விடுபட்ட தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், மதுரை ரசிகர்கள் மத்தியில் பேசும்போது உங்களுக்கு கறி சோறு போட வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் சைவ உணவிற்கு மட்டுமே அனுமதியுண்டு. எனவே வேறொரு தருணத்தில் பார்க்கலாம் என கூறினார்.
 
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கொண்டாடும் மதுரை ரசிகர்கள் ஜனவரி 7-ஆம் தேதி மதுரை அழகர் கோவிலில் கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் இந்த விஷயத்தில் யாரும் எதிர்பார்க்காதவிதமாக பீட்டா அமைப்பு மூக்கை நுழைத்துள்ளது.
 
இது தொடர்பாக நடிகர் ரஜினிக்கு பீட்டா எழுதியுள்ள கடிதத்தில், கோவில்களில் கிடா வெட்டக்கூடாது என சட்டம் உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஆடு, மாடு, எருது உள்ளிட்ட விலங்குகளை கொல்பவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என மிரட்டும் தொனியில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு பீட்டா அமைப்பு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.
 
பீட்டாவின் இந்த கடிதத்துக்கு பின்னர் மதுரை ரஜினி ரசிகர்கள் கிடா வெட்டி விருந்து வைக்கும் முடிவை கைவிட்டுள்ளனர். கிடா மட்டும் தான் இல்லை, ஆனால் விருந்து உண்டு என ரஜினி ரசிகர்கள் கூறியுள்ளனர். ரஜினிக்கு பீட்டா எழுதிய கடிதத்தையடுத்து அவரது ரசிகர்கள் இந்த முடிவை எடுத்து பின்வாங்கியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்